நாகையிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மெத்தபெட்டமின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வு (திருச்சி மண்டலம்) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்த சுகன் என்பவர் வீட்டில் 16 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் மெத்தபெட்டமின் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.இதில் தொடர்புடைய நாகப்பட்டினம் மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பூபாலன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றை ஒப்பந்த முறையில் எடுத்து அவர் நடத்தி வருவதும், பூபாலன் மனைவி இலங்கையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
விசாரணையின் முடிவில், பூபாலன் (42), பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சுகன் (27), இவரது சகோதரர் பார்த்திபன் (29), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (30) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 135 கிலோ மெத்தபெட்டமின் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நாகப்பட்டினம் சுங்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பூபாலனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் தெரிவித்துள்ளார்.